
நிலம் வாங்குமுன் நிதானம் தேவை!
நகரில் முக்கியமான டாக்டர் அவர். சொந்தமாக ஒரு மருத்துவமனை கட்டுவது என்பது அவருடைய கனவு. அதற்கான ஏற்பாடுகளில் இருந்த அவரிடம் வந்த ஒருவர் மடிப்பாக்கம் பகுதியில் நல்ல இடம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். சொந்த ஊர்க்காரர் என்பதோடு இதற்கு முன் சில இடங்களை வாங்கிக் கொடுத்த மனிதர் என்பதால் டாக்டர் மிகுந்த நம்பிக்கையோடு அவர் சொன்ன இடத்தைப் போய்ப் பார்த்தார். இடம் பிடித்துப் போனது.

சுமார் இரண்டு கோடிக்கும் மேலான மதிப்புள்ள அந்த இடத்துக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு பத்திரங்களை வாங்கியிருக்கிறார் டாக்டர். அதில் அவருக்கு ஏதோ நெருடல் ஏற்பட, தன் வழக்கறிஞர் நண்பரிடம் கொடுத்திருக்கிறார். அப்போதுதான் தெரிந்திருக்கிறது அது வேறொரு சொத்துக்கான பத்திரங்கள் என்று! பணம் போய்விடுமே என்ற பரிதவிப்போடு லோக்கல் ஆட்களைப் பார்த்திருக்கிறார். அப்போதுதான் அந்த ஆசாமியின் சீட்டிங் செயல்பாடுகள் டாக்டருக்கு தெரிய வந்திருக்கிறது. இப்போது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். போலீஸ் தன் தேடலைத் தொடங்கியிருக்கிறது. சரியான சொத்துக்களை சரியான நபர்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள அந்த டாக்டர் கொடுத்திருக்கும் விலையைப் பார்த்தீர்களா… வியர்வை சிந்தி உழைத்த பணம்… ஒன்றுக்குப் பல முறை யோசித்துவிட்டுக் கொடுங்கள், எப்போதுமே!