
கவலைகளை விட்டொழியுங்கள்!
மன நிம்மதி இழந்தவர்கள் கவலைப்படுவார்கள். தங்களது தோல்விக்குத் தன்மையும், மற்றவர்களையும் குறைசொல்லிக் கொண்டே இருப்பார்கள். முற்காலங்களில் செய்யத் தவறிய காரியங்களை அல்லது செய்துவிட்ட காரியங்களைப் பற்றியே வருந்திக் கொண்டிருப்பார்கள்.
கவலைப்படுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், கவலைப்படுவதால் என்ன பயன் என்பதாகும். நாம் ஒரு பிரச்சினையைச் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தால் என் கவலைப்பட வேண்டும். ஒரு வேளை அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாது என்றால் கவலைப்பட்டு என்ன பயன்? ஆக பிரச்சினையைச் சமாளிக்க முடிந்தாலும், முடியாவிட்டாலும் கவலை என்பது தேவையற்ற ஒன்று. அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது.

அதற்காக ஒரு பிரச்சனை என்று வந்தவுடன், எந்தக் கவலையும் இல்லாமல் இருந்து விட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. பிரச்சினை என்றதும் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று இந்தப் பிரச்சினையால் அதிகபட்சம் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பாதிப்பைச் சந்திக்க மனதளவில் தயாராக வேண்டும். பெரும்பாலும் அப்படி ஒரு பாதிப்பு வராமல் கூட போய் விடும். இரண்டாவது, அதனைச் சமாளிக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் விட்டுவிட வேண்டும். கவலைப்படக் கூடாது. ஒய்வு பெறும் தருவாயில் பலர் மனநலம். பாதிக்கப்பட்டு அல்லல்படுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

