English     
     Tamil         
 
     

B

OOKS

 

     
உடலினை உறுதி செய்

“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன், உடம்பை வளர்ந்தேன் உயிர் வளர்த்தேனே”
-திருமூலர்

கல்வி, செல்வம், பதவி, அதிகாரம், நன்மதிப்பு, உடல் நலம்- இவற்றில் எதற்கு முதலிடம்? என்று கேட்டால் “உடல் நலம்” என்று தயக்கமின்றி பதில் தந்துவிடுவேன். புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, நோயின்மை, நீண்ட ஆயுள் – இவை நம் முன்னோர்கள் சொல்லி வைத்த பதினாறு செல்வங்கள். இதில் பாதி செல்வங்கள் உடல் நலத்தை குறிப்பவை; மீதி செல்வங்கள் உடல் நலம் இருந்தால் நாம் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பவை. நல்ல உடல்நலம் இருந்தால்தான், எல்லா செல்வங்களையும் ஈட்டமுடியும் என்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை அனுபவிக்கவும் முடியும்.

வாழ்கையை முழுமையாக வாழ, இரண்டு நிபந்தனைகள் உண்டு. ஒன்று சாதனை படைப்பது, மற்றொன்று படைத்த சாதனையை அனுபவிப்பது. இந்த இரண்டுமே அடிப்படையானது நல்ல உடல்நலம்தான். நம் உடல் தரும் சுகத்தைவிட உயர்ந்த சுகம் எதுவும் இல்லை.இந்தச் சுகத்தினை இந்த உலகில் எந்த ஒரு நபரும், எந்தப் பொருளும், எப்படிப்பட்ட சாதனையும் தந்துவிட முடியாது. அதே வேளையில் உடல் நலம் கெட்டுவிட்டால் ஏற்படும் துன்பத்தை விட பெரிய துன்பம் ஏதும் இல்லை. சற்று சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால், இந்த உண்மை உங்களுக்கும் புரியாமல் போகாது!

உறுதியான உடல் உள்ள மாணவனால் தான் நன்றாகப் படிக்க முடியும். நல்ல உடல் நலம் உள்ள கணவனால்தான் இல்லற வாழ்கையை இனிதாக நடத்திச் செல்ல முடியும். நல்ல உடல் நலம் உள்ள பெண்ணால் தான் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று அவர்களை உடல் நலம் மற்றும் மனநலம் உள்ளவர்களாக வளர்க்க முடியும்.

இந்நூல் உங்களது வாழ்க்கையில் உடனே ஒரு திருப்பத்தை (paradigm shift) ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், இந்த நூல் மூலம் கிடைத்த கல்வி உங்களது உணவுப் பழக்கத்தில், உடற்பயிற்சி முறையில், ஒழுக்கச் செயலில் மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.

– முனைவர். செ. சைலேந்திர பாபு, I.P.S.

 
 
Back