English     
     Tamil         

என்னைப் பற்றி

தனிநபராகச் சொல்வதானால், நான் சைலேந்திரபாபு… கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றவன். ஆர்வத்தின் காரணமாக அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பொது சட்டம் இளங்கலைப் படிப்பும் மக்கள் தொகைக் கல்வியில் முதுகலையும் படித்தேன். அதைத்தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறேன். சமீபத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றிருக்கிறேன்.

என்னுடைய எழுத்தார்வத்தின் தூண்டுதலால் உடலினை உறுதி செய், நீங்களும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம், அமெரிக்காவில் 24 நாட்கள், உனக்குள் ஒரு தலைவன் போன்ற புத்தகங்களைத் தமிழிலும், You too can become an IPS officer, Principles of Success in Interview, A guide to health and happiness, Boys and Girls be ambitious, ஆகிய புத்தகங்களை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன்.

இளைஞர்களோடு அளவளாவுவதும் கலந்துரையாடுவதும் அவர்களை சரியான இலக்கு நோக்கிய முனைப்பு கொண்டவர்களாக உருவாக்குவதும் எனக்குப் பிடித்த விஷயம். சுருங்கச் சொன்னால் மாணவர்கள் மனதில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்துவதுதான் எனக்கு மனநிறைவு தரும் விஷயம்.

அரசுப் பணியாளராகச் சொல்வதானால், தற்போது நான் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மண்டல ஐ.ஜி-யாக பணியாற்றுகிறேன். திருவனந்தபுரம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் அதிகாரியாக என்னுடைய பணியைத் தொடங்கினேன். அதன்பிறகு இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகடமியில் பயிற்சி பெற்றேன்.

அதைத் தொடர்ந்து கோபிசெட்டி பாளையம், சேலம், தர்மபுரி ஆகிய ஊர்களில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றினேன். அதன்பிறகு சென்னை, அடையார் துணை கமிஷனராக பணியாற்றினேன். அதையடுத்து விழுப்புரம் பகுதியில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும், சென்னை காவல்துறையில் இணை கமிஷனராகவும் பணியாற்றினேன்.

அதன்பிறகு திருச்சி டி.ஐ.ஜி ஆகவும், கரூர், தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், சிறப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பணியாற்றினேன். அதன்பிறகு கோயமுத்தூர் மாநகர கமிஷனராகப் பணியாற்றினேன்.

பதவி எதுவாக இருந்தாலும் போலீஸ் என்ற பொறுப்பு எப்போதும் முழுமையானதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அதிலிருந்து நான் ஒருபோதும் மாறியதில்லை.