English     
     Tamil         
 

B

ooks

 
 

அமெரிக்காவில் 24 நாட்கள்

ஒருவருக்கு நேர்ந்த அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பாடம் என்பார்கள். ஏனென்றால் எல்லா விஷயங்களையும் நாமே உணர்ந்து அறிந்து கொள்வது என்றால் ஒரு ஜென்மம் போதாது. அதனால்தான் பிறருடைய அனுபவங்களை உணர்ந்து நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.இங்கேயும் அதுபோலத்தான்… நான் அமெரிக்கா சென்று வந்த அனுபவத்தை புத்தகமாக்கி இருக்கிறேன். அமெரிக்காவைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்.

International Visitor Leadership Programme (IVLP) என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் 2007 பிப்ரவரி 18 முதல் – மார்ச் 11 வரை நடந்த ‘சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ளுதல்’ என்ற பயிற்சி முகாமில் கலந்து கொள்ளச் சென்றபோது எனக்கு நேர்ந்த அனுபவத் தொகுப்பே இந்தப் புத்தகம். இப்பயிற்சியின் நோக்கம் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ளத் தேவையான ஆளுமைத் திறன்களை வளர்ப்பதாகும்.

சென்னை விமான நிலையத்தில் பயணச் சீட்டு (Boarding Pass) வாங்கியதுமே,திரும்பி வந்து பயணக் கட்டுரையை எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், நான் கண்ட ஒவ்வொரு காட்சியையும் மனதில் பதிவு செய்து பின்னர் அவற்றை எழுத்தாக்கினேன். நான் எழுதியிருப்பது அனைத்துமே, நான் கண்டதும், கேட்டதும்,உணர்ந்ததும், அனுபவித்தும் ஆகும். இன்னும் சொல்லப் போனால் இது எனது பொறியுணர்வு (Perception) ஆகும். ஒவ்வொரு மனிதனும் தனது ஆளுமைத் திறன் (Personality) என்ற வண்ணக் கண்ணாடியின் மூலமாகதான் இந்த உலகைப் பார்க்கிறான் மற்றும் உணர்கிறான். நானும் எனது ஆளுமைத் திறன் என்ற கண்ணாடி மூலமாகத்தான் அமெரிக்காவைப் பார்த்தேன், உணர்ந்தேன். அனால் எனது எழுத்தில் என் சுய விருப்பு – வெறுப்பு பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. இருபின்னும் என்னால் முடிந்த வரை நடுநிலையுடன் (Objective) எழுதியுள்ளேன்.

அமெரிக்காவைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்று நீங்கள் நினைத்தால், இந்த புத்தகம் உங்களுக்கு உதவாது. அமெரிக்கா பற்றி செய்திகளைத் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால் தொடர்ந்து படியுங்கள்.Knowledge is Power என்பதால் சில உண்மைகளையும், புள்ளி விவரங்களையும் (Facts and Figures) எடுத்துக் கூறியுள்ளேன். எனக்கு வியப்பாக இருந்த நிகழ்ச்சிகளையும், காட்சிகளையும் விவரித்துள்ளேன். இது இளைஞர்களின் பொது அறிவை (General Knowledge) உயர்த்த உதவும்.